போலி ஷாப்பிங் இணையதள மோசடி: துபாயில் 6 பேர் கைது
போலி ஆன்லைன் ஷாப்பிங் தளம் மூலம் வங்கி அட்டை விவரங்களைத் திருடி மக்களின் சேமிப்பைக் களவாடிய 6 பேர் கொண்ட கும்பலை துபாய் போலீஸ் கைது செய்துள்ளது.
போலியான ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தை உருவாக்கி, அதில் பொருட்கள் வாங்க முயன்றவர்களின் வங்கி அட்டை விவரங்களைத் திருடிய ஆறு பேர் கொண்ட கும்பலை துபாய் போலீஸ் ஒருங்கிணைந்த சோதனையில் கைது செய்துள்ளது.
திருடிய அட்டை விவரங்களைக் கொண்டு அனுமதியில்லாத கொள்முதல்கள் செய்து, பணத்தை டிஜிட்டல் வாலெட்டுகளுக்கு மாற்றியுள்ளனர். சில அட்டை விவரங்களை மற்ற மோசடியாளர்களுக்கும் விற்றுள்ளனர். எதுவும் வாங்காத நிலையில், காலையில் எழுந்தபோது பெரிய தொகை கழிக்கப்பட்டதாக வங்கிக் குறுஞ்செய்திகள் வந்ததாக பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டைகளும் காசோலைப் புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன.
ஆன்லைனில் வாங்கும் முன் அந்த இணையதளம் உண்மையானதா என்று உறுதி செய்யுங்கள். நம்பகமற்ற நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் அட்டை எண் போன்ற வங்கி விவரங்களைப் பகிர வேண்டாம் என்று துபாய் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
உங்கள் கணக்கில் தெரியாத பரிவர்த்தனைகள் தென்பட்டால் உடனே புகார் அளிக்கவும்: துபாய் போலீஸ் தொடர்பு மையம் 901, Police Eye சேவை, அல்லது துபாய் போலீஸ் செயலி மற்றும் இணையதளத்தில் உள்ள eCrime வசதி.
